Saturday 10 July 2010

பிரிவு

இயலாமை தந்த
வேதனை விழிகளில்
குருதி வழியும்- உன்
முகம் பார்த்ததும்...
கண்ணாடிச்சுவரின் மறுபுறம் நின்று
கையசைத்ததும்...
இருதயச்சதையை,
மெல்லிய ஊசி கொண்டு
நொடி நொடியாய் கிழித்தெடுத்த வேதனை!
என் உலகம்
அந்த விநாடியில்
முழுதுமாய் ஸ்தம்பித்து விட்ட போதும்,
மூச்சு விட வேண்டுமென்று
பரிதாபமாய்
காற்றிடம் கெஞ்சிய போதும்,
இரக்கமேயில்லாமல்,
குரல்வளை வரை உயிர் இழுக்கப்பட்டு,
விழி பிதுங்கி நின்ற போதும்,
''அருகாமை'' யின் வெறுமை
வலிமையாய்,
இன்னும் காட்டமாய் குத்துகிறது!
எல்லாம் தாண்டியும்...!
இந்த ஒற்றைச்சொல் கொண்டு
எனக்கு தரப்பட்ட,
அரக்கத்தனமான வலி...
தாயின் அருகாமையில்,
தாரத்தினால்...!
தாரத்தின் அருகாமையில்,
தாயினால்...!
என்ன சொல்ல...
மானுட அளவுகோல் தவிர்க்கப்பட்டால்...
பிரிவுக்கு மட்டும்,
'சாத்தியம்' என்பது 'இல்லாமை',
எப்போதும்...!!!

1 comment:

  1. Hi, mir gefällt das Gedicht sehr. Ich wünsche,du wirst mehr davon schreiben als "Poratam von Tamiler." Du hast mir noch was versprochen zu schreiben....
    hdmfg
    sm

    ReplyDelete